பூகோளமயமாக்கலும் கலாசாரமும்!

உள்ளங்கையில் உலகம் என்ற வார்த்தையை பள்ளி செல்லும் காலங்களில் பாடப் புத்தகங்களிலோ
அல்லது ஏதேனும் பத்திரிகைகளிலோ வாசிக்கின்ற போது அது என்னடா! உள்ளங்கையில் உலகமா?
என்று வியப் படைந்த தருணங்களை இப்போது நினைத்துப் பார்க்கையில் இதழோரம் புன்னகை
வருகிறது! பூகோளமயமாக்கலின் மாற்றமே இந்த நிலைப்பாட்டிற்கு அடிப்படை என
அறிந்துகொள்ளும் போது சிந்தனை விழித்துக் கொள்கிறது.

1990 களில் டங்காஸ் அறிக்கையைத் தொடர்ந்து முக்கியம் பெறத் தொடங்கிய கருத்தியலே
பூகோளமயமாக்கல் அல்லது உலகமயமாக்கல் எண்ணக்கருவாகும்.

உலகமயமாக்கல் என்றால் என்ன?

பொருளாதார, தொழிநுட்ப, கலாசார மற்றும் அரசியல் பிணைப்புகளுக்கு ஊடாக உலக மக்களை மிக
அருகில் எடுத்துவருவதே பூகோளமயமாக்கல் அல்லது உலகமயமாக்கல் எனப்படுகிறது. ஒவ்வொரு
துறைசார்ந்தும் மக்களை ஒருங்கிணைக்கும் இந்த செயன்முறையானது அவர்களை ஒருவரில் ஒருவர்
தங்கியிருக்கும் நிலையையும் உருவாக்க மறக்கவில்லை.

பூகோளமயமாதலுக்கான காரணமாக அமையப்பெற்ற குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி,
வர்த்தக தாராளமயமாக்கல், மூலதனத்தின் அதிகரிப்பு, இலகுவான போக்குவரத்து, குறைவான, கடுமையான குடியேற்றக் கொள்கைகள், சந்தைப்படுத்தல் என்பன அரசியல், சமூக,பொருளாதார மற்றும்
கலாசார ரீதியாக சமூகங்கள் ஒன்றுபட்டு ஒரே சமூகத்திற்குள் எல்லா மக்களும் ஒன்றிணையக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது என்றே கூற வேண்டும்.

இதனால்தான் உலகமே உள்ளங்கையில் என்றும்
உலகமே குக்கிராமமாக மாறி உள்ளது என்றும் பேசப்படுவதை காணமுடிகிறது.

உலகமயமாக்கலானது புவியியல் உலகமயமாதல், அரசியல் உலகமயமாதல், சமூகவியல் உலகமயமாதல், நிதி உலகமயமாதல், பொருளாதார உலகமயமாதல், தொழினுட்ப உலகமயமாதல்
மற்றும் கலாசார உலகமயமாதல் என பல வகைகளில் அமையக்காணப்படுகின்றன.

பூகோளமயமாக்கல் கலாசாரம் மீதும் ஈர்ப்புக்கொண்டதால் உள்ளூர் கலாசாரமும் மேற்கத்தேய கலாசாரமாக பரிணமித்தது’ கால மாற்றங்களோடு மனிதர்களாகிய நாமும் தான் மாறிவிட்டோம் !

கலாசாரம் என்றால் என்ன?

எப்பொழுதும் ஒரு சமூகமானது தன்னுடைய சொந்த கலாசாரங்களை கொண்டு இயங்கி வருவதோடு சமூகத்தில் இருந்து பிரிக்க முடியாத தவிர்க்க முடியாத கருப்பொருளாக அமைகின்றது. அதாவது குறிப்பிட்ட சமுதாயத்தின் உடைய நம்பிக்கைகள், விதிகள், சடங்குகள், குறியீடுகள் போன்றவற்றின் இணைப்பினால் உண்டாகும் வெளிப்பாடே கலாசாரம் எனும் விதை.

ஐக்கிய நாடுகளின் கல்வி,விஞ்ஞான,கலாசார ஸ்தாபனமான யுனெஸ்கோ ‘ஒரு சமூகத்தின் அல்லது சமூகக்குழுவொன்றின் தனித்துவமான ஆன்மீக,பொருளாதார, அறிவுசார்ந்த மற்றும் உணர்வு ரீதியான ஒட்டுமொத்த அம்சங்களின் தொகுப்பே கலாசாரம் என வரையறுக்கிறது.

இது கலை மற்றும் இலக்கியத்துக்கு மேலதிகமாக வாழ்க்கை முறை, ஒன்றிணைந்து வாழும் முறை, பாரம்பரியங்கள் மற்றும்
நம்பிக்கைகளை உள்ளடக்கியிருக்கிறது. ஒன்றையொன்று பின்னிக்கொண்டிருக்கும் சமூகச் சங்கிலிக்குள்ளேயே நாம் வாழ்ந்துகொண்டிருப்பதால் இவ்வாறான வாழ்க்கையில் மொத்த மனித கூட்டத்தையும் சரியான பாதைக்கு கொண்டு செல்லவேண்டும்
என்பதற்காகவே மனிதன் என்பவன் இப்படித்தான் வாழவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

அத்தகைய கட்டுப்பாடுகளின் படி வழிவழியாக மக்கள் வாழ்வதே கலாசாரம் எனப்படுகிறது. உலகமயமாக்கலினால் வெவ்வேறு சமூகங்கள் ஒன்றோடொன்று இணையும்போது உலகில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் பகிரப்படுவதால் கலாசார பரிமாற்றம்
இடம்பெறுகிறது.

கலாசாரமயமாக்கம் என்றால் என்ன?

ஒரு காலநிலையில் என்ன உணவு கிடைக்கின்றதோ அதை மட்டும் உண்டு வாழ்ந்த நிலை எங்கும் இல்லை அப்படியே உண்ணபட்டாலும் அவற்றுக்காக பயன்படுத்தும் பொருட்கள் முதல் சமைக்கும் முறை உண்ணும் முறை என அனைத்திலும் மாற்றங்கள் இருக்கின்றன.

வாழிடங்களுக்கு அருகில் கிடைத்த பொருட்களை வைத்து வீடு கட்டி இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்த வாழ்வியல் முறைக்கு
பதிலாக அயலவர் கூட வீட்டிற்கு வர முடியாத அளவுக்கு கட்டிடம் அமைத்து வாழ்ந்து வருகின்றோம்.

பல்வேறு விதமான சமய நம்பிக்கைகளை பின்பற்றுகின்றோம், ஆங்கில மொழியில் பேசுகின்றோம். தொழில் ரீதியாகவும் மத ரீதியாகவும் தனித்த அடையாளத்துடன் அணியப்பட்ட ஆடைகளுக்கு பதிலாக
விதவிதமான ஆடைகளை அணிகின்றோம்.

உணவு,இருப்பிடம்,மொழி, பழக்கவழக்கங்கள் போன்ற கலாசார கூறுகளில் ஏதோ ஒரு வகையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது தானே? இவை பற்றி ஆழமாக ஆராய்கின்றபோது பூகோளமயமாக்கல்
ஏற்படுத்தியிருக்கின்ற கலாசாரமயமாக்கத்தை அறிந்துகொள்ளமுடியும்.

ஒவ்வொரு நாட்டிலுமே அபிவிருத்திக்கு அடிகோலிட்டு வாதப் பிரதி வாதங்களை ஏற்படுத்தியிருக்கின்ற பூகோளமயமாக்கல் கலாசார ரீதியில் ஏற்படுத்திய மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்த
விடயங்களுள் தகவல் தொடர்பு சாதனங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

இணைய ஊடகம், வெகுஜன ஊடகம் என்பவற்றின் காரணமாக எல்லைதாண்டி வெளியாகும் திரைப்படங்கள் விளம்பரங்கள் கலாசார பரிமாற்றத்தில் முக்கிய மைக்கல்லாக அமைந்துவிடுகின்றன.
உற்பத்தி, பொழுதுபோக்கு ஆகியவற்றின் மாதிரியுடன் வெளியாகத் தொடங்கும் ஊடகங்கள் வழியாக முன்வைக்கப்படும் கலாசாரத்தை நுகர தலைப்படும் மக்கள் காலப்போக்கில் அதனையே பின்பற்ற
தொடங்கிவிடுகின்றனர்.

வர்த்தக ரீதியில் உலக நாடுகளிடையே தொடர்புகளை கட்டியெழுப்ப வேண்டிய சூழ்நிலை, குடிபெயர்வு, சுற்றுலா பயணங்கள் காரணமாக ஓர் நாட்டிலிருந்து இன்னொரு நாட்டில் வாழ்வதற்கு மக்கள் பழகியமை
என்பன கலாசார பரிமாற்றத்திற்கு வித்திட்டன என்பதும் மறுப்பதற்கில்லை.

கால ஓட்டங்களின் சுழற்சியில் மாறிதான் ஆக வேண்டும் என்ற எண்ணமும் மாற்றத்தை ஏற்காவிட்டால் எந்த சமூகமும் நிலைபெற முடியாது என்கின்ற நிலைப்பாடும் விதைக்கப்பட்டு வெவ்வேறு சமூகங்கள் ஒன்றோடொன்று இயைபுற்று கலாசாரமயமாக்கம் உருவாகியிருக்கிறது.

கலாசாரம் பாதிக்கப்பட்டதா?

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற வரிகளுக்கமைய உலகிலுள்ள அனைவரும் பூகோளமயமாதலினால் உறவினர்களாகி ஏனைய சமூகங்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கங்கள், கலை, மொழி பற்றி
அறிந்துகொள்ளும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.

பொதுவான பழக்கவழக்கங்களை உள்ளடக்கிய மற்றும் தனிநபர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மாதிரியான கலாசாரம் ஆரம்பமாகியமை, அதிகமான சமூகங்கள் வித்தியாசமாக இருந்தாலும்,
உலகமயமாக்கல் காரணமாக பொதுவான விடயங்களைப் பகிர்ந்து கொள்ள முடிகின்றமை, மக்கள் தங்கள் அறிவையும் வளர்ச்சிக்கான சாத்தியங்களையும் விரிவுபடுத்துவதற்காக மிகவும் பரவலாக
பேசப்படும் மொழிகளைக் கற்றுக்கொள்வதில் அக்கறை கொள்கின்ற சூழல் காணப்படுவதும் நேர்மறையான விளைவுகளாக காணப்படுகின்றன.

உணவு, உடை முறைகளில் பாதுகாத்து வருகின்ற பாரம்பரியங்களுக்கு பாதிப்பேற்படுவதால் சுதேச
கலாசாரம் பற்றிய பயவுணர்வு ஏற்படுகின்றது. உலக மொழியாக ஆங்கிலத்தை ஏற்றுக்கொள்வதும், வலைப்பின்னல் யுகத்தில் ஒருசில மொழிகளே இணையத் தொடர்பு மொழிகளாக எழுச்சிபெறுவதும்,
தொழிநுட்ப வலுவற்ற மொழிக்கூட்டமும் சிறு சிறு மொழிகளும் இலக்கண இலக்கிய முனைப்புகள் இல்லாது அழிந்துவிடக் கூடிய தன்மை உருவாகுவதும், எல்லா நாடுகளிலும் புதிய நிலைமையில்
இறைச்சி, பாலுணவுகள், பதப்படுத்தப்பட்ட சீனி வகைகள் அடங்கிய உடன் உணவுகளை நாடுவதால் நோய் நிலைமைகளுக்கு காரணமாகிறது.

குறைவான நபர்களைக் கொண்ட சமூகங்கள் அதிக நபர்களை
கொண்ட சமூகங்களின் கலாசார செல்வாக்கால் பாதிக்கப்படுகின்ற தன்மை உருவாகுவதும், இடம்பெயர்ந்த மக்களின் பழக்கவழக்கங்கள் அல்லது கலாசார மரபுகள் தொலைந்து போகும் அல்லது
மறந்து போகும் அபாயம் உள்ளமையும் பிரபலமான கலாச்சாரத்தை உருவாக்குவதன் மூலம் கலாசார பன்முகத்தன்மை குறைவதும், கலாசார பூகோளமயமாக்கல் ஒரு தேசத்தின் இறையாண்மையை இழக்க
வழிவகுப்பதும் கலாசாரமயமாக்கலினால் ஏற்பட்டிருக்கின்ற எதிர்மறையான விளைவுகளாகும்.

கலாசாரமயமாக்கத்தின் விளைவுகள் பெருமளவில் எதிரிடையேயான அர்த்தங்களையே கொண்டிருப்பதால்
ஒவ்வொரு நாட்டினதும் கலாசார தனித்துவத்தையும் நாடுகளுக்கிடையிலான இணைப்பையும் பேணும் விதத்தில் அதாவது வேற்றுமையில் ஒற்றுமையை உறுதிப்படுத்தக்கூடிய மாற்றுவழிகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

சந்திரகுமார் யதுஷினி

யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply