ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட தயாசிறி ஜயசேகரவுக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட கடிதத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
தயாசிறி ஜயசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த தடை உத்தரவை இன்று காலை பிறப்பித்துள்ளார்.
ஜயசேகரவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, கடந்த திங்கட்கிழமை கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம், மன்னிப்புக் கோரி அவ்வாறான கடிதத்தை வழங்குவதற்கு கட்சியின் தலைவருக்கு அதிகாரம் இல்லை எனவும் ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து சமர்ப்பணங்களையும் பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி, எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்படி குறித்த தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.