இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட கடன் திட்டத்தின் மீளாய்வு நடவடிக்கைகளுக்காக விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை எதிர்க்கட்சியினர் சந்தித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் திட்டத்திற்கான முதல் மீளாய்வு கலந்துரையாடல் கடந்த 14 ஆம் திகதி முதல் இடம்பெற்று வருகிறது.
தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் புருவர் (Peter Breuer) தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினால் மீளாய்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையிலே, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் எதிர்க்கட்சியினர் இடையேயான சந்திப்பு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து எதிர்க்கட்சி சர்வதேச நாணய நிதியத்திடம் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமது அரசாங்கத்தின் கீழ் குறித்த உடன்படிக்கை மறுபரிசீலனை செய்யப்படும் எனவும், மக்களுக்கு சாதகமான உடன்பாட்டை மேற்கொண்டு அதன் மூலம் நாட்டை கட்டியெழுப்புவதற்கான மூலோபாயங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழுவிடம் தெரிவித்துள்ளார்.