யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – நீதிமன்று விடுத்துள்ள அதிரடி உத்தரவு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற மருத்துவ தவறால்  சிறுமியொருவரின்  இடது கை, மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட  விவகாரத்தில், சிறுமியின் கையை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட விசேட உடற்கூற்று நிபுணர் ஊடாகப்  பரிசோதிக்குமாறு யாழ்,நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 08 வயது சிறுமி ஒருவர் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதன் போது சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட “கனுலா” உரிய முறையில் பொருத்தப்படாதமையால் , சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை, மத்திய சுகாதார அமைச்சு என்பன விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சிறுமியின் பெற்றோரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் ஊடாக யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணை நேற்றைய தினம் புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது , சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட விசேட உடற்கூற்று நிபுணர் ஒருவர் ஊடாக பரிசோதனைக்கு உட்படுத்த பொலிஸார் கோரியமைக்கு அமைய, பெயர் குறிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார்.

இதனைத்  தொடர்ந்து குறித்த  வழக்கு  எதிர்வரும் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply