முல்லைத்தீவு நீதிபதி திடீர் பதவி விலகல் – வெளியானது பகிரங்க கண்டனம்!

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி உள்ளமை தமிழர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவித்த “ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு” இது இந்த நாட்டின் நீதிப் பொறிமுறையை கேள்விக்குள்ளாக்கியுள்ளதுடன் தமிழ் நீதிபதிகள் தீர்ப்பு வழங்க முடியாத நாட்டின் நாடாளுமன்றை ஒட்டு மொத்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் புறக்கணிக்க வேண்டும் என கண்டனம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக உன்னதமான நீதித்துறையில் தலைசிறந்த நீதவானாக குருந்தூர் மலை சட்டவிரோத பௌத்த கட்டுமானம், உள்ளிட்ட விவகாரங்களில் யாருக்கும் அடிபணியாமல் தீர்ப்புக்களை வழங்கிய முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா, அழுத்தங்களால் பதவி விலக நிர்ப்பந்திக்கபட்டு உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை வெளியேறி உள்ளமை தமிழர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் நீதிபதிகள் தீர்ப்பு வழங்க முடியாத நாட்டின் சட்டவாக்க சபையான நாடாளுமன்றை ஒட்டு மொத்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் புறக்கணிக்க வேண்டும் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு ஊடாக வலியுறுத்தல் விடுப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குருந்தூர் சட்டவிரோத பௌத்த கட்டுமானம் தொடர்பாக நீதியான தீர்ப்பு வழங்கியமைக்காக தொடர் அழுத்தம் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி,  பதவியை துறக்க நிர்ப்பந்திக்கப்பட்ட நீதிபதி சரவணராஜாவிற்கு தமிழ்ச்சமூகமாக ஆதரவை வெளிப்படுத்துவதுடன் அவரின் இந்த முடிவுக்கு காரணமான, அழுத்தங்களை பிரயோகித்த சகல தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை தமிழர் சாரந்த அனைத்து
கட்டமைப்புக்களும் சட்டவாளர்கள் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதியை வழங்கும் நீதிபதிக்கு ஏற்பட்டுள்ள இந்த பாரதூர நிலையை சீர்செய்வதற்கு இலங்கையின் சகல முற்போக்கு சக்திகளும் சர்வதேசமும் ஐ.நா அமைப்புக்களும், நீதி பரிபாலனம் சுயாதீனமாக இயங்க உச்சபட்ச நடவடிக்கைகளை இந்த தீர்க்கமான தருணத்தில் எடுக்க வேண்டும் எனவும் குறித்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply