மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முறையற்ற வகையில் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சிகளுக்கு தான் தடையாக இருந்த காரணத்தினாலேயே தன்னை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து அரசாங்கம் நீக்கியது எனத் தெரிவித்துள்ளது.
மின்சார கட்டண அதிகரிப்பால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைய மின்சார கட்டணத்தை மீண்டும் 22 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்க மின்சார சபை கடந்த மாதம் 28 ஆம் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு யோசனை முன்வைத்துள்ளது.
ஒரு வருடத்தில் இரண்டு முறை மாத்திரமே மின்கட்டணத்தை அதிகரிக்க முடியும். அதற்கமைய இந்த ஆண்டு இரண்டு தடவைகள் முறையற்ற வகையில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நியாயமற்ற மின்கட்டண அதிகரிப்பால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிற்றுறை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த மக்களும் பொருளாதார நெருக்கடியாலும், வாழ்க்கை சுமை அதிகரிப்பாலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மின்கட்டணத்தை அதிகரித்தால் மக்களின் நிலை என்னவாகும் எனபதை ஆட்சியாளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவும் எந்தளவுக்கு சுயாதீனத்துடன் செயற்படும் என்பதும் தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
ஆகவே, மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்கும் அரசாங்கத்தின் முயற்சியை எதிர்த்து ஒட்டுமொத்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் எனத் தெரிவித்தார்.