இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிரான வழக்கிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பிரஜை ஒருவருக்கு பொதுப் பணத்தை வழங்கியதாக குற்றம்சாட்டி தினியாவல பாலித தேரரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே, கோட்டை நீதவான் திலின கமகேவினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் குறித்த வழக்கு தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது.
2006 மற்றும் 2015 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக பணியாற்றிய போது அரசாங்கத்திற்கு சொந்தமான 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தானியர் ஒருவருக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
அத்துடன், அமைச்சரவை அனுமதி இன்றி குறித்த நிதியை வழங்கியதன் மூலம் நம்பிக்கை மீறல் மற்றும் நிதி மோசடி உள்ளிட்ட விடயங்களுக்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தினை நிரூபிப்பதற்கான சாட்சியங்களை முன்வைக்க தவறியதைத் தொடர்ந்து குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.