இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தில் இடம்பெற்று வரும் வன்முறைகளுக்கு மத்தியில் மேலும் ஒரு இலங்கைப் பெண் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
இதன்படி, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், மேலும் 2 பேர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து செயற்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நேற்று வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு, மோதல் சூழ்நிலை காரணமாக ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், 0094 – 716640560 என்ற இலக்கத்திற்கு WhatsApp ஊடாக தகவல் தெரிவிக்க முடியும் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், யாரேனும் இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் பற்றிய தகவல்களைத் தேட வேண்டியிருந்தால், 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்வதன் மூலம் தகவல்களைப் பெற முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், டெல் அவிவ் மற்றும் ரமல்லாவில் உள்ள இலங்கை தூதரகங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.