மாத்தளை – உன்னஸ்கிரிய பகுதியில் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸாரின் ஊடாக தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, உன்னஸ்கிரிய – எல்.எம்.ஓ பிரிவைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பை கைவிடாத பட்சத்தில், கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் அறிவித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
தம்முடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு வருகைத் தந்த உயர் அதிகாரி, தமது கோரிக்கைகளை ஏற்க மறுத்ததாகவும், அதனைத் தொடர்ந்தே பொலிஸார் இவ்வாறான அறிவித்தலை பிறப்பித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
உன்னஸ்கிரிய – எல்.எம்.ஓ பிரிவில் சுமார் 35திற்கும் அதிகமான தோட்டத்; தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பணியாற்றி வந்த தமக்கு தோட்ட நிர்வாகத்தின் ஊடாக அநீதி இழைக்கப்பட்டு வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் தொடர்ச்சியாக பணிப் பகிஷ்கரிப்பு இடம்பெற்று வருவதாகவும், பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.