ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட சுற்றாடல்துறை!

முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட் வகித்த சுற்றாடல்துறை அமைச்சு பதவி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 44/3ஆம் பிரிவின் அடிப்படையில், பிரதமரின் ஆலோசனை அடிப்படையில், குறித்த சுற்றாடல் அமைச்சு, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட்டின் கட்சி உறுப்புரிமை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் இரத்து செய்யப்பட்டமை சட்டரீதியானது என உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

இதன்படி, அவரது நாடாளுமன்ற உறுப்புரிமையும் இரத்தாகியுள்ளது. இந்தநிலையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனமொன்று வெற்றிடமாக உள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்தியிருந்தார்.

இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினருக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கு பொருத்தமான உறுப்பினரின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்க மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதனடிப்படையில், 1981ஆம் ஆண்டின், 1ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் அடிப்படையில், குறித்த வெற்றிடத்திற்கு அலி சாஹீர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply