பிரித்தானியாவும் இலங்கையும் பரஸ்பர சாரதி அனுமதிப்பத்திர பரிமாற்றத்தை எளிதாக்கும் முயற்சியில், தற்போது ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே, சாரதி அனுமதிப்பத்திரங்களை மாற்ற விரும்பும் நபர்களுக்கு ஒரு சுமுகமான செயல்முறையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்து மூலமான வினாவுக்கு பதில் அளிக்கும்போதே, நாடாளுமன்ற துணைச் செயலாளர் (போக்குவரத்துத் துறை) ரிச்சர்ட் ஹோல்டன் இதனை தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய பொருளாதாரப் பகுதிகளிலுள்ள நாடுகளில் பயன்படுத்தப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தி பிரித்தானியாவில் வாகனங்களை செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறே, ஐரோப்பிய பொருளாதாரப் பகுதிகளிலுள்ள அனைத்து நாடுகளிலும் பிரித்தானிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தும் வகையில் பரஸ்பர உடன்படிக்கை நடைமுறையில் உள்ளது.
ஐரோப்பாவுக்கு வெளியில் மேலும் 22 நாடுகளுடனும் இத்தகைய பரஸ்பர உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தற்போது, இலங்கை உட்பட மேலும் ஏழு நாடுகளுடன் பரஸ்பர சாரதி அனுமதிப்பத்திர பரிமாற்றத்துக்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.