இலங்கை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள புதிய முகங்கள்!

வரவு செலவுத் திட்டத்தை வெற்றி கொள்ளும் நோக்கில் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் அமைச்சரவை மீண்டும் திருத்தப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுவதோடு, மேலும் சில புதிய முகங்கள் அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, அமைச்சுப் பதவிகளை மாற்றுவதற்கான யோசனைகள் ஏற்கனவே அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல உறுப்பினர்களுக்கு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பத்து பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் அந்த கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காததால், அதனை தொடர்ந்து வலியுறுத்துவதில்லையென பெரமுன முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியகியுள்ளது.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தொடர்ந்து அநீதிகள் நடந்தால், வரவு செலவுத் திட்டத்திலோ அல்லது நெருக்கடியான காலகட்டத்திலோ உரிய பதிலடி கொடுப்போம் என பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கடந்த காலங்களில் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, சில அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்களின் செயற்பாடுகள் மிகவும் குறைந்த மட்டத்தில் இருப்பதை அரசாங்கம் அவதானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் நாட்களில் அமைச்சுக்களின் பல செயலாளர்கள் மாற்றப்பட உள்ளனர்.

சுகாதார அமைச்சர் பதவி உட்பட மூன்று அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி அண்மையில் மாற்றினார்.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நவம்பர் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply