இலங்கையில் இருந்து ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுமிகள் உட்பட ஏழு பேர் படகு மூலம் இந்தியாவின் ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி தீவுக்கு நேற்று அதிகாலை சென்றடைந்ததாக இந்திய மரைன் பொலிஸார் தெரிவித்தனர்.
7 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் வாழ்க்கை நடத்த முடியாமல் திணறி வருவதாக குடும்பத்தினர் பொலிஸாரிடம் தெரிவித்ததுடன் பெருகிவரும் கடனை அவர்களால் திருப்பிச் செலுத்த முடியாததால், நாட்டை விட்டு வெளியேறி இந்தியக் கரையை அடைய முடிவு செய்ததாகவும் தெரிவித்தனர்.
மன்னாரில் உள்ள படகோட்டியிடம் 1.50 லட்சம் இலங்கை ரூபாயை கொடுத்து, அங்கிருந்து சுமார் மூன்று மணி நேரத்தில் பால்க் விரிகுடாவைக் கடந்து தனுஷ்கோடி தீவை அடைந்தனர் குடும்பத்தினர். தகவலின் பேரில் மரைன் பொலிஸார் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிந்ததும் குறித்த நபர்கள் மண்டபம் மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.