ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இவ் வருட வரவு செலவுத் திட்ட உரையின்போது முன்மொழிவு செய்யப்பட்ட, நிபந்தனைகள் அற்ற காணி உரிமைப் பத்திரம் வழங்கும் “உறுமய” நிகழ்ச்சி திட்டம் காணி அமைச்சால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக நாடு பூராகவும் உள்ள விவசாய வகுப்பைச் சேர்ந்த பொது மக்களுக்கு 10,000 காணி உறுதிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மக்களுக்கு வழங்குவதற்கு தயார் செய்யப்பட்டு ஜனாதிபதியின் கையொப்பத்திற்காக ஆயத்தமான நிலையில் உள்ள அரச காணிகளுக்கான அளிப்புப் பத்திரங்களை, நிபந்தனைகள் அற்ற முழு உரிமை உடைய உரிமங்களாக மாற்றி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்கிடையில் பூர்த்தி செய்யப்பட உள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் தயார் செய்யப்பட்ட 711 காணி அளிப்பு பத்திரங்கள் இவ்வாறு முழு உரிமையுடைய உரிமைப் பத்திரங்களாக மாற்றி மக்களுக்கு வழங்கிவைக்கப்பட உள்ளன .
அண்மைக்காலமாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ். எல். எம். ஹனிபாவின் வழிகாட்டலில் சம்மாந்துறை காணிப் பிரிவினால் அதிகமான காணி ஆவணங்கள் சம்மாந்துறை பிரதேச மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.