யாழ்.ஊடக அமையத்தின் மக்களுக்காக நாம் செயற்றிட்டம் இன்று ஆரம்பம்!

யாழ்.ஊடக அமையத்தின் மக்களுக்காக நாம் செயற்றிட்டத்தின் கீழ் டெங்கு விழிப்புணர்வு செயற்றிட்டம் இன்று காலை யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் பரவல் தீவிரமடைந்துள்ளதை கருத்தில் கொண்டு யாழ்.ஊடக அமையத்தின் சமூக பணிகளுக்கான மக்களுக்காக நாம் செயற்றிட்டத்தின் ஊடாக இந்த விழிப்புணர்வு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த செயற்றிட்டத்தின் ஆரம்ப நாளான இன்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருமான வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வகுமாரிடம் இருந்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை பெற்று செயற்றிட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.

மேலும் ஊடகவியலாளர்களின் சமூக பொறுப்புமிக்க விழிப்புணர்வு பணிக்கு பாராட்டுக்களை தெரிவித்த பணிப்பாளர், அனைத்து மட்டங்களிலும் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.மத்திய பேருந்து நிலையம், வர்த்தகநிலைய தொகுதி ஆகியவற்றில் விழிப்புணர்வு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் இந்த விழிப்புணர்வு செயற்றிட்டம் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு டெங்கு அபாய வலயங்களில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஆரம்ப நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி நித்தியானந்தா, யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதம தாதி சந்திர மெளலிஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply