கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் குழப்பநிலை! கைதிகள் தப்பியோட்டம்!

பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்றையதினம் கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த மோதலில் 10 கைதிகளும் ஒரு இராணுவ சிப்பாயும் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் தற்போது வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, குறித்த மோதலில் கைதிகள் புனர்வாழ்வு நிலையத்தின் சமையலறை மற்றும் பல இடங்களை சேதப்படுத்தியுள்ளதாகவும் வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், புனர்வாழ்வு நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதற்கும் அங்கு மோதலை ஏற்படுத்துவதற்கும் கைதிகளால் பயன்படுத்தப்பட்ட பொருட்களும், போதைப்பொருட்களும் சோதனைகளின் போது பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.

இதேவேளை, நேற்று தப்பியோடிய 20 பேர் கொண்ட கைதிகள் குழு, புனித யாத்திரைக்காக வந்த பேருந்து ஒன்றை கடத்த முற்பட்டதுடன், அதிலிருந்த வர்த்தகர் ஒருவரின் 50000 ரூபாய் பணமும் 2 கையடக்கத் தொலைபேசிகளும் கைதிகளால் அபகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதலின் போது புனர்வாழ்வு நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களையும், தப்பியோடிய 20 கைதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் 34 கைதிகளும் இன்று பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள கைதிகள் இதற்கு முன்னரும் பல தடவைகள் மோதல்களில் ஈடுபட்டு தப்பியோடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply