மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, நேற்று இரவு பிங்கிரியவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது காணாமல் போன துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவரும் பெண்ணொருவரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றுமுன் தினம் அதிகாலை படேபொல பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய மல்வத்து ஹிரிபிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட முயற்சியின் போது கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை காயப்படுத்தும் வகையில் அவரை தாக்கிவிட்டு குறித்த சந்தேக நபர் அதிகாரியின் சேவை துப்பாக்கியுடன் தப்பிச் சென்றுள்ளார்.
இஹல லுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான பொலிஸ் உத்தியோகத்தர், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேகநபர் பிங்கிரிய பிரதேசத்தில் உள்ள இல்லத்தில் மறைந்திருந்த வேளையில் அவரை கைதுசெய்துள்ளனர்.
மேலும் கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து, பொலிஸ் உத்தியோகத்தரிற்கு சொந்தமான ரிவோல்வர், 9mm தோட்டாக்கள் 3 மற்றும் சந்தேகநபர் பயன்படுத்திய முச்சக்கர வண்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் தலைமறைவாக இருக்க உதவிய பெண்ணொருவரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 42 மற்றும் 35 வயதுடைய வத்துரகம மற்றும் உடுபத்தாவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.