ஜனவரி மாதம் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பௌத்த பிக்கு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக கருதப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.டி.ஐ.ஜி நிஹால் தல்துவாவின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்டவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மொனராகலை ஹம்பேகம பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனவரி 23ஆம் திகதி அதிகாலையில் காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் உள்ள விகாரைக்குள் இருந்த பௌத்த பிக்கு ஒருவரை சுட்டுக் கொன்றது.
சம்பவத்தில் படுகாயமடைந்த 45 வயதான பௌத்த பிக்கு வண.கலப்பலுவாவே தம்மரதன தேரர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் ஏழு சந்தேக நபர்களை விசாரணை அதிகாரிகள் இதுவரை கைது செய்துள்ளனர்.
நான்காவது சந்தேக நபரிடம் இருந்து தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் T-56 ரக துப்பாக்கி மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் ரிமோட் சுவிட்ச் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.