யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பொலிஸார் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து வன்முறை கும்பல் ஒன்று கடத்தி சென்று, கணவனை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள்ளதுடன், மனைவியை வீதியில் இறக்கி விட்டு சென்றிருந்தனர்.
குறித்த வழக்கு நேற்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவின் டிஜிட்டல் வீடியோ பதிவகத்தை பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த கொலை சம்பவம் தொடர்பாக மேலும் 6 பேர் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்ததுடன் குறித்த சந்தேக நபர்களுக்கு அடைக்களமளிக்கும் வகையில் யாராவது செயல்பட்டால் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.