பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் பயன்படுத்தும் சீருடையை அணிந்து ரி56 துப்பாக்கிகளை ஏந்தியவாறு கம்பஹா பிரதான பாடசாலையின் ‘கெடேட்’ குழுவொன்று அணிவகுப்பில் கலந்து கொண்ட சம்பவம் தொடர்பில் கம்பஹா தலைமையக பொலிஸார் நேற்று முன்தினம் (07) விசாரணைகளை ஆரம்பித்தனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சீருடைக்கு நிகரான ஆடைகளை அணிந்து அணிவகுப்பில் கலந்து கொண்ட இந்த மாணவர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் பயன்படுத்தும் அதே துணியையே பயன்படுத்தி சீருடையை தயார் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது சம்பந்தமாக, இந்த சீருடைகள் தைக்கப்பட்ட அனுராதபுரத்தின் துணிக் கடை ஒன்றின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீருடை அணிந்த மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் தோன்றியமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் சீருடை தயாரித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை ‘கெடேட்’களுக்கு இரண்டு வகையான அங்கீகரிக்கப்பட்ட சீருடைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், ராணுவம் அல்லது சிறப்புப் படையின் சீருடைகளை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை எனவும், இது தவறான முன்னுதாரணமாகும் எனவும், இதற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
‘கெடேட்’ அணிவகுப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகளின் போது ‘கெடேட்’களுக்கு புள்ளி 2.2 ரக வெடிமருந்துகளை மட்டுமே சுடக்கூடிய தனியான அரை தானியங்கி ஆயுதமே வழங்கப்படுவதாகவும், எனினும் இந்த மாணவர்கள் ரி56 துப்பாக்கிகளை கையில் ஏந்தியவாறு பயிற்சி அணிவகுப்பில் கலந்து கொண்டமை சிக்கல் மிக்கது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முழுமையான போர்ப் பயிற்சி பெற்ற பாதுகாப்புத் திணைக்கள அதிகாரி ஒருவருக்கே தானியங்கி துப்பாக்கி வழங்கப்பட வேண்டும் எனவும், பாடசாலை மாணவர்களுக்கு இந்த ஆயுதங்கள் யாருடைய தேவையின் பேரில் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.