களுத்துறை, வரகாகொட, பஹல கரன்னாகொட பிரதேசத்தைச் சேர்ந்த மூவர், சட்டவிரோத மதுபானம் அருந்தி திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 43 மற்றும் 68 வயதுடைய கரன்னாகொட பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் மூவரும் சனிக்கிழமை (27) இரவு சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் நேற்று காலை வீட்டில் இருந்த போது உயிரிழந்துள்ளார், மற்றுமொருவர் சுகவீனமடைந்து தனியார் மருந்தகத்தில் இருந்து மருந்து உட்கொண்டுள்ளார்.
இதையடுத்து, மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மற்றைய நபர் சுகயீனம் காரணமாக ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்ப ஆதாரங்களின்படி, பாதிக்கப்பட்ட மூவருக்கும் பார்வை இழப்பு மற்றும் அதிக வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தன.
மேலும், அதே பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு நபர்கள் தற்போது கொழும்பு-தெற்கு போதனா வைத்தியசாலை, ஹொரண வைத்தியசாலை மற்றும் ஜயவர்தனபுர வைத்தியசாலைகளில் இதே போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் வரக்காகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், கிராம மக்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த மரணத்துடன் சந்தேகநபருக்கு தொடர்புள்ளதா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.