லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (10) பிற்பகல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இன்று (11) முதல் ரயில்கள் வழமை போன்று இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. .
பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 6ம் திகதி முதல் ரயில் சாரதிகள் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ரயில் பொது முகாமையாளர் எழுத்துமூலமாக வழங்கிய உறுதிமொழிக்கு அமைய தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது.
இதற்கமைய இன்று காலை முதல் ரயில்கள் வழமை போன்று இயங்கும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்ததையடுத்து, எதிர்காலத்தில் ரயில் சேவையை மறுசீரமைப்பதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ரயில்வேயை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் திட்டம் தோற்கடிக்கப்படும் என அதன் இணை அழைப்பாளர் திரு.எஸ்.பி.விதானகே தெரிவித்தார்.
இதேவேளை, தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிராக 1,000,000 கையொப்பங்களைப் பெற்றதன் பின்னர் உயர் நீதிமன்றத்திற்குச் செல்லத் தயாராக உள்ளதாக தொழில் வல்லுநர்களின் தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து நாளை (12) நாடளாவிய ரீதியில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அதன் தலைவர் கபில பெரேரா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.