கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், கடந்த காலத்தில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட ஜப்பானிய உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய தூதுக்குழுவின் தலைவர் கலாநிதி இசுமி ஹிரோடோ தெரிவித்தார்.
இலங்கை வருகை தந்துள்ள வீடமைப்பு, நிர்மாண மற்றும் நகர்ப்புறத் துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஜப்பானிய உயர்மட்டக் குழு நேற்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தது.
இதன்போது தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தித் திட்டம், கொழும்பு துறைமுக கிழக்கு இறங்குதுறை அபிவிருத்தித் திட்டம், மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணம் மற்றும் தொலைக்காட்சி டிஜிட்டல் ஒளிபரப்புத் திட்டம் ஆகியவற்றை உடனடியாக மீள ஆரம்பிக்க முடியும் என ஜப்பானிய பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
கடந்த ஆட்சியில் இடைநடுவில் நிறுத்தப்பட்ட இலகு ரயில் திட்டத்தை மீள ஆரம்பிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக குறிப்பிட்ட ஜப்பானிய பிரதிநிதிகள், நல்லதொரு திட்டத்தை மீள அமுல்படுத்துவதற்கான சாத்தியம் இருப்பதாக தெரிவித்ததோடு, கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த திட்டமான இலகு ரயில் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கு சாத்தியமாக உள்ள இடங்கள் குறித்து ஆராய நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டனர்.
குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீட்டுவசதி மற்றும் பிற நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதில் அரச -தனியார் கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். இலங்கை அரசாங்கம் அதன் கொள்கைகள் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இணங்க சுற்றாடல் நட்பு திட்டங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் இந்த கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.
ஜப்பானில் மின்சார விநியோகத் துறையை மேம்படுத்தும் நோக்கில் ஜப்பானில் தனியார் துறையிலுள்ள தொழில் வாய்ப்புகளுக்காக தொழில்நுட்பத் துறையில் இலங்கை பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தத் தயாராக இருப்பதாக ஜப்பானிய பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். மேலும், கார்பன் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக மேம்பட்ட ஜப்பானிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை உள்ளடக்கிய கூட்டு கார்பன் குறைப்பு பொறிமுறை குறித்து ஜப்பானிய பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோசி ஹிதேகி , சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கியின் தலைவர் மெயெதா ததாசி பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர். எச். எஸ். சமரதுங்க, கொழும்பு கப்பல்துறை முகாமைத்துவ பணிப்பாளர் திமிர எஸ். கொடகும்புர உட்பட ஜப்பானின் பல முன்னணி வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவினர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.