தமிழரசு கட்சிக்குள் தமிழ் வேட்பாளருக்கு வலுக்கும் ஆதரவு!

எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது, யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் குழப்பம் நீடிக்கிறது.

வடக்கு கிழக்கு சார்பில் தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற நிலையில், இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

வவுனியாவில் அண்மையில் இடம்பெற்ற கட்சி மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இந்த தீர்மானத்திற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கை தமிழரசு கட்சி யாரை ஆதரிக்கும் என்று கூறுவது கடினம் என அந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

“ஒரு கட்சி என்ற வகையில், சஜித்துக்கு (பிரேமதாச) ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டாலும் எந்த வேட்பாளரை முன்னிறுத்தலாம் என்பதைப் பொறுத்து இப்போது அனைவரும் சிறந்த தீர்வைக் கருத்தில் கொண்டுள்ளனர், எனவே மக்கள் யாருக்கு ஆதரவை வழங்குவார்கள் என்று சொல்வது கடினம்.

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்து வாக்களிக்க வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

“இலங்கை தமிரசு கட்சியின் மற்றைய உறுப்பினர்கள் அரியநேத்திரனை ஆதரிக்கின்றனர். திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் பல மாவட்ட உறுப்பினர்கள் அரியநேத்திரனுக்கு வாக்களிக்க தீர்மானித்துள்ளனர்” என்று ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது போட்டியாளர்களின் விஞ்ஞாபனங்களை மீளாய்வு செய்த பின்னரே தீர்மானிக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சி கடந்த மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply