கிளிநொச்சி மண்ணின் சுயாதீன ஊடகவியலாளரைக் கடத்த முயன்றனர் எனச் சந்தேகிக்கப்படும் இருவரைப் பொலிஸார் இன்னமும் கைது செய்யவில்லை.
அதாவது, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலகத்தில் பணிபுரியும் முருகையா தமிழ்ச்செல்வன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை தனது கடமையை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, கறுப்பு நிற வாகனத்தில் வந்த இருவர் அவரைக் கடத்திச் செல்ல முற்பட்டனர்.
இவ்வேளை கடத்தல்காரர்களிடமிருந்து தப்பித்து செல்ல முயன்ற போது அவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. காயங்களுடன் மீட்கப்பட்ட தமிழ்செல்வன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வந்த போலீசாரிடம் தம்மைக் கடத்த வந்த வாகனத்தை ஓட்டிச் சென்றவர் கிளிநொச்சி, பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் என கிளிநொச்சி ஊடக அமையத்தின் செயலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி நபர் தேசிய நேற்று முன்தினம் காலை நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலகத்திற்கு வந்து தன்னையும், அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவரையும் திட்டியதாக முருகையா தமிழ்ச்செல்வன் சக ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.
சக ஊடகவியலாளரை கடத்த முயன்ற இருவரையும் நேற்று மாலைக்குப் பின்னரும் பொலிஸார் கைது செய்யத் தவறியுள்ளனர் என்று பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பல தமிழ் ஊடக நிறுவனங்களில் சுயாதீன ஊடகவியலாளர்களாகப் பணிபுரியும் முருகையா தமிழ்ச்செல்வன், கிளிநொச்சி பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் சுற்றுச்சூழல் அழிப்பு, பரவி வரும் சட்டவிரோத போதைப்பொருள், மண் கடத்தல் தொடர்பான செய்திகளை வெளியிட்டு வரும் முன்னணி ஊடக செயற்பாட்டளாராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
