தொடங்கொடை ஹெலதுவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்து ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் திருடப்பட்ட வலம்புரி சங்கு அதே விகாரையின் கிணற்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, மிகவும் பெறுமதியான இந்த வலம்புரி சங்கு சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் விகாரையிலிருந்து திருடப்பட்டதாக களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு முறைப்பாடு கிடைத்தது.
இது தொடர்பாக நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வலம்புரியை திருடிய நபர் குறித்த தகவல்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த நபரை கண்காணித்து வந்த பொலிசார் அவரை கைது செய்ய சென்றபோது, அந்த நபர் அப்பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த நபரின் வீட்டில் பல தடவைகள் பொலிஸார் சோதனையிட்ட போதும் வலம்புரியை கண்டு பிடிக்க முடியவில்லை.
இதேவேளை, நேற்று (03) களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பில், குறித்த விகாரையின் கிணற்றின் அடிப்பகுதியில் வலம்புரி ஒன்று காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வலம்புரி மீட்கப்பட்டதுடன், இது ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தனது விகாரையில் திருடப்பட்ட வலம்புரி என விகாராதிபதி அடையாளம் காட்டினார்.
எனினும் வலம்புரியை திருடிய நபர், வலம்புரியின் வெளிப்புற அலங்காரத்திற்காக பதிக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த மாணிக்கக்கற்களை அகற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டிருந்த போதும், அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.