இன்று (4) அதிகாலை 1 மணியளவில் வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பரதோட்டை வள்ளிவெல வீதியில் நடந்து சென்ற 5 பேரை இலக்கு வைத்து, மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடாத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
இது தொடர்பான மேலதிக தகவல் ஒன்று கிடைக்கபெற்றுள்ளது. அதாவது, துப்பாக்கிச் சூடு நடாத்தியவர்கள் வருகைதந்ததாக சந்தேகிக்கப்படும் குறித்த மோட்டார் சைக்கிள் வெலிகம, மூனமல்பே பகுதியில் உள்ள ஏரியில் வீசப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது, மாத்தறை சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அரச மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்த கைதியின் சடலம் அடக்கம் செய்யப்பட்ட துர்க்கி கிராமத்தில் உள்ள வீட்டிற்கு நேற்று (03) இரவு ஐவர் குழு சென்றுவிட்டு கால்நடையாக வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வெலிகம, கப்பரதொட்ட, வள்ளிவெல வீதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 2 நபர்கள் காயமடைந்த நிலையில் வலான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்ற நிலையிலேயே, துப்பாக்கிச் சூடு நடாத்தியவர்கள் வருகைதந்ததாக சந்தேகிக்கப்படும் குறித்த மோட்டார் சைக்கிள் வெலிகம, மூனமல்பே பகுதியில் உள்ள ஏரியில் வீசப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.