பதவி விலகினார் கனடா பிரதமர் ட்ரூடோ!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக நேற்று (6) அறிவித்துள்ளார்.

கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“2015-ஆம் ஆண்டில் பிரதமரான கணம் முதலே கனடாவுக்காகவும் கனேடிய மக்களுக்காகவும் பாடுபட்டு வந்துள்ளதோடு, நடுத்தர மக்களின் மேம்பாட்டிற்காகவும் உழைத்துள்ளேன். கொரோனா தொற்று காலத்தில் மக்கள் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்ததை கண்ணுற்றேன். வட அமெரிக்க கண்டத்தில் தடையில்லா வர்த்தகம் நீடிக்க உழைத்தேன்” என தனது கடந்த கால செயற்பாடுகளை விபரித்த பிறகு அவர் தனது பதவியை ராஜினாமா செய்வது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

உட்கட்சி பிரச்னைகளை கவனிக்க வேண்டியிருந்ததால், கனடா மக்கள் தேர்ந்தெடுத்த சிறந்த பிரதமராக தம்மால் இருக்க முடியவில்லை என்று தெளிவாகிவிட்டது என்று அவர் தெரிவித்தார்.

அத்துடன், கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக அறிவித்த அவர், அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்போதைய பதவியில் நீடிப்பேன் என்றார்.

ஜஸ்டின் ட்ரூடோ 2015 இல் தனது லிபரல் கட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்து வெளிப்படையான குடியேற்றக் கொள்கையை மையமாகக் கொண்ட ஒரு புதிய வகையான அரசியலை உறுதியளித்தார். பெண்களின் உரிமையை மேம்படுத்துதல், செல்வந்தர்கள் மீதான வரிகளை அதிகரித்ததோடு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திட்டங்களுக்கும் ஆதரவளித்தார்.

ஆனால் அவரது முதல் பதவிக்காலத்தில் ஊழல் புகார்கள் எழுந்தன. மிக சமீபத்திய ஆண்டுகளில், கனடாவில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம் மற்றும் அவரது ஆட்சி மீதான விரக்தி காரணமாக அவரின் செல்வாக்கு குறைவடையத் தொடங்கியது.

இவ்வாறான சூழ்நிலையில் தனது சொந்த கட்சியினால் அழுத்தங்களிற்குள்ளாகியே பிரதமர் ட்ரூடோ பதவி விலகல் குறித்து அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் நடைபெறவிருக்கும் தேர்தலில் லிபரல்கள், அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்களிடம் மோசமாக தோல்வியடைவார்கள் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

தொடர்ச்சியான மோசமான கருத்துக் கணிப்புகளால் பீதியடைந்த லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கியூபெக், ஒன்டோரியோ மற்றும் அட்லாண்டிக் கனேடிய மாகாணங்களைச் சேர்ந்த டஜன்கணக்கான ஆகியோர் ட்ரூடோவை ராஜினாமா செய்யுமாறு பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துக்கணிப்புகளில் பங்கேற்ற மூன்றில் இரு பங்கு பேர் ட்ரூடோ மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் `Ipsos’ தளத்திற்கு பதிலளித்தவர்களில் 26% பேர் மட்டுமே ட்ரூடோ பிரதமருக்கான சிறந்த தேர்வு என்று கூறினர்.

இந்த நிலையிலேயே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சியின் தலைவர் பதவி மற்றும்  பிரதமர் பதவியில் இருந்து நேற்று (6) ராஜினாமா செய்தார். புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை தானே பதவியில் நீடிப்பதாகவும் அறிவித்தார்.

வரும் 8ம் திகதி கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply