அரிசி இறக்குமதி செய்வதற்கு, இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி காலம் நாளை (10) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம், கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி தனியார் துறையினருக்கு அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியிருந்தது.
அதன்படி, நேற்று (08) நண்பகல் 12.00 மணி நிலவரப்படி, இறக்குமதி செய்யப்பட்ட மொத்த அரிசியின் அளவு 115,000 மெட்ரிக் தொன்களைத் தாண்டியுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அரிசியை இறக்குமதி செய்ய வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளதால், அரிசி இறக்குமதி செய்வதற்கான அனுமதி மீண்டும் நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.