சிறுமி கடத்தப்பட்ட விவகாரம்- சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

கம்பளை, தவுலகல பகுதியில் வேன் ஒன்றில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரையும், கடத்தலுக்கு ஆதரவளித்த மற்றொரு சந்தேக நபரையும் இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் நேற்று (15) கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 11 ஆம் திகதி வானில் வந்த ஒரு குழுவினரால் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தவுலகல பொலிஸ் நிலையமும், சிறப்பு பொலிஸ் அதிகாரிகளின் பல குழுக்களும் இணைந்து சந்தேகநபர்களை கைது செய்ய விசாரணைகளை தொடங்கியிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 13ஆம் திகதி, சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரும், கடத்தப்பட்ட மாணவியும் அம்பாறை நகரில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதுடன், சந்தேகநபர் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபரையும் நேற்று முன்தினம் (14) பொலிஸார் கைது செய்திருந்தனர்.

அத்துடன் கடத்தலை மேற்கொள்ள சந்தேகநபர்கள் வந்த வானும்  பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டதுடன், பின்னர் அதன் ஓட்டுனரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் காவலில் வைக்கப்பட்டார்.

தற்போது, கடத்தப்பட்ட சிறுமி சட்ட வைத்திய அதிகாரியினால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தவுலகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply