சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (16) காலை அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “Invest in Sri lanka-round table meeting 2025” முதலீட்டு அமர்வில் கலந்து கொண்டார்.
இதன் பின்னர், இலங்கைக்கு கிடைத்த மிகப்பெரிய முதலீட்டை குறிக்கும் வகையில் இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும், சீனாவின் சினோபெக் முன்னணி சர்வதேச பெற்றோலிய நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைசாத்திடும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
அதன்படி, ஹம்பாந்தோட்டை பகுதியில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், முன்னணி சர்வதேச பெட்ரோலிய நிறுவனங்களில் ஒன்றான சினொபெக்கினால் 3.7 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டில், 200,000 பீப்பாய்கள் எண்ணெயை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக அமையவுள்ளதோடு, இதில் பெரும்பாலான பகுதியை ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளன.
சீனாவிலிருந்து கிடைக்கப்பெற்ற இந்த முதலீடு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதோடு, ஹம்பாந்தோட்டை பகுதியில் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதாரத்தையும் வலுப்படுத்தும். இதன் நன்மைகள் இலங்கை மக்களுக்கு கிடைக்கும் எனவும் எதிர்பாக்கப்படுகின்றது.
இந்த நிகழ்வில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கைக்கான சீன தூதுவர் சீ ஜென்ஹோன்க், சீனாவுக்கான இலங்கை தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
