பாதாள உலக உறுப்பினராக அறியப்படும் ‘பொடி லெசி’ என்ற ஜனித் மதுஷங்க சில்வா இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தடுப்புக் காவலில் இருந்த ‘பொடி லெசி’ கடந்த டிசம்பர் ஒன்பதாம் திகதி பலபிட்டிய உயர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, அடுத்த நீதிமன்ற திகதி வரை வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டதாகவும் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இந்த நிலையில் ‘பொடி லெசி’ நாட்டிலிருந்து தப்பிச் சென்றதாக கடந்த காலங்களில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வௌியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொடி லெசி தனது பிணை நிபந்தனைகளை மீறி சட்டவிரோதமாக நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்த நிலையில், அவர் இந்தியாவில் இருப்பதாக தகவல் கிடைத்ததும், சந்தேக நபரைக் கைது செய்ய இந்திய அதிகாரிகளிடம் உதவி கோரப்பட்டிருந்தது.
இதன்படி, பொடி லெசி கைது செய்யப்பட்டதாக இந்திய பொலிஸார், இலங்கை அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
பிணை நிபந்தனைகளை மீறியதற்காக குறித்த நபரை இலங்கைக்கு அழைத்து வந்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

