நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியான ‘ஆப்ப மாமா’ கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை (17) இரவு அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேச வைத்தியசாலை வீதி மற்றும் தேசிய பாடசாலை ஒன்றுக்கும் அருகில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பெரியநீலாவணை வி.சி. வீதியை சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி. இஹலகேவின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 30 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்ததுடன் சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
தற்போது இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.