நாயை தூக்கிலிட்டு கொலை செய்த பெண் கைது!

நாயை தூக்கிலிட்டு படுகொலை செய்த பெண் இன்று மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1907 ஆம் ஆண்டு இலக்கம் 13 ஆம் இலக்க விலங்குகளுக்கு வன்கொடுமை செய்வதைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்தின் கீழ் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

முல்லைத்தீவு – மாங்குளம் மதகுவைத்த குளம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் ஆடுகளை வளர்த்து வந்திருந்த நிலையில், வீட்டாரின் வளர்ப்பு நாய் அவரது ஆடொன்றினை கடித்ததில் ஆடு காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளது.

இது தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் இரு தரப்பினரும் இணக்க சபைக்கு சென்ற நிலையில் அங்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

இணக்க சபையில் நஷ்டஈடு கேட்ட போது, நாய் வளர்த்த குடும்பத்தினர் வறுமை நிலையில் உள்ளதால் உயிரிழந்த ஆட்டுக்கு நஷ்டஈடு கொடுக்க முடியவில்லை என கூறியுள்ளனர்.

இதனால் ஆடு வளர்த்த பெண், நஷ்டஈடு தர முடியவில்லை எனில் அவர்களின் நாயை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரவே, அதற்கு நாய் வளர்த்த குடும்பத்தினர் நாயை அவர்களுக்கு கொடுக்க சம்மதித்தனர். இவ்வாறு இரு தரப்பினரின் பிரச்சனையும் இணக்க சபையில் தீர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

ஆனால் நாயை வாங்கி சென்ற பெண் அந்த நாயை மரமொன்றில் தூக்கிலிட்டு படுகொலை செய்ததுடன், அதனை புகைப்படமாக எடுத்து நாயை வளர்த்த குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், நாயை தூக்கிட்டு பயங்கரமாக படுகொலை செய்த பெண்ணிற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரி வந்திருந்தனர்.

அதேவேளை, ஆட்டுக்கு பதிலாக நாயை வழங்கி வைத்த சம்பவம் தொடர்பில் இணக்க சபையினர் மீதும் பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், இது தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே மேற்கண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply