யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மிகுந்த கவனம் செலுத்த உள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த கூட்டத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண ஆளுநர், அரசாங்க அதிபர் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
இந்தநிலையில், இன்றைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்வதற்கான 20 முக்கிய விடயங்களை உள்ளடக்கிய விடயதானங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பிரதீபனுக்கு வழங்கியுள்ளார்.
அவையாவன,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விடுதியில் அதிகளவான நோயாளர்கள் உள்ள பட்சத்தில் கட்டில் இல்லது நிலங்களில் இருக்க வேண்டியுள்ளது. இதனால் அங்கு காணப்படும் கட்டில் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய வேண்டும்.
யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள காச நோய் சிகிச்சை பிரிவின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
மயிலட்டியில் உள்ள காசநோய் பிரிவை அங்கு இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும்.
மயிலிட்டியில் இயங்கிய காசநோய் மருத்துவமனை தற்காலிகமாக கோப்பையில் இயங்கி வருகின்ற போதும், அங்கு ஆளணிகள் நியமிக்கப்படாமையால் ஆளணி பற்றாக்குறை நிலவுகின்றது. இதனால் உடனடியாக ஆளணி நியமனம் செய்யப்படல் வேண்டும்.
பண்ணையில் உள்ள மார்பக சிகிச்சை நிலையத்துக்கு என்று எக்ஸ்ரே ரேடியோ கிராபர் இல்லாமையால் அதற்கென நிரந்தரமாக ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
பண்ணையில் உள்ள மார்பக சிகிச்சை நிலையத்தில் பரிசோதனைக்காக பெறப்படும் சளி மாதிரிகளை களஞ்சியப்படுத்துவதற்கான குளிர்சாதனப்பெட்டிகள் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் 5 நாட்களுக்குள்; பரிசோதிக்க வேண்டிய மாதிரிகள் உரிய கருவிகள் இல்லாமையால் ஒரு வருடங்களாக சேமிப்பில் உள்ள நிலை காணப்படுகின்றது. இது சீர் செய்யப்பட வேண்டும்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இளைஞர்கள் பலர் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ள நிலையில் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை புனர்வாழ்வளிப்பதற்காக நிலையம் ஒன்றை யாழ் மாவட்டத்தில் அமைக்கப்பட வேண்டும்.
யாழ் மாவட்டத்தில் கடற்தொழில் படகுகளை பாதுகாப்புக்கான கல்லணைகளை பருத்தித்துறை மூர்க்கம், முனை, கொட்டடி கடற்கரை, சுப்பர்மடம் இன்பர்சிட்ட கடற்கரை, சக்கோட்டை கடற்கரை, திக்கம் கடற்கரை, கொத்தியால் கடற்கரை, றேவடி கடற்கரை, ஆதிகோவிலடி கடற்கரை, தொண்டமனாறு கடற்கரை, பலாலி கடற்கரை, சேந்தான்குளம், மாதகல் கடற்கரை ஆகிய பகுதிகளில் அமைத்தல் வேண்டும்.
கொத்தியால் கடற்கரையில் படகுகள் தரிப்பிடத்தில் அகழப்பட்ட மண்ணை அப்புறப்படுத்த நடவடிகை எடுக்க வேண்டும்.
வல்வெட்டித்துறை கிழக்கு கிராமிய கடற்தொழில் அமைப்பினருக்குச் சொந்தமான படகுகள் தரித்து நிற்கும் பகுதியிலிருந்து அகழப்பட்ட மண் கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ளது. மண்ணை அகற்றுவதற்கான திணைக்களங்கள் இன்னமும் வழங்கவில்லை. எனவே குறித்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ள மண்ணை அண்மையிலுள்ள பொது அமைப்புக்களது பயன்பாட்டிற்காக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படல் வேண்டும்.
இந்திய மீனவர்களால் வலைகள், படகுகள் சேதமாக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படல் வேண்டும்.
வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட விவசாய அழிவுகளுக்கு இழப்பீடு வழங்கப்படல் வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் சொந்தக் காணிகள் மற்றும் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட வேண்டும். குறித்த வீட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி போதாமலுள்ள நிலையில் நிதியை அதிகரிக்க வேண்டும்.
குறித்த கோரிக்கைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு செயலாளரான மாவட்ட அரசாங்க அதிபருக்கு விடயதானங்களை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.