அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக மனுத் தாக்கல்!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதில் அமைச்சர் ஆனந்த விஜேபால, பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

குறித்த மனுவில்,

பிரதிவாதியான ஆனந்த விஜேபால கடந்த நவம்பர் மாதம் 18ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகையில், ஆனந்த விஜேபால ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியாக நியமிக்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கை விடுத்ததாகவும், அமைச்சர் ஆனந்த விஜேபால ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியாக நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் மனுதாரர் கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் 91ஆவது சரத்தின்படி, அரசாங்க சேவையில் உள்ள ஒருவர், நாடாளுமன்றத்தில் அமர்ந்து வாக்களிக்க தகுதியற்றவர் என மனுதாரர் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் தலைமை அதிகாரி பதவி என்பது ஒரு அரசாங்க பதவி என்றும், அதன்படி, அமைச்சர் ஆனந்த விஜேபால அத்தகைய பதவியை வகிக்கும் அதே வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பின்படி அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் பதவி வகிக்க தகுதியற்றவர் என்று தீர்ப்பளிக்கவும், அவரது பதவியை செல்லாததாக்கும் தீர்மானத்தை எடுக்கவும் மனுதாரர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

மேலும், இந்த மனு விசாரிக்கப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரை ஆனந்த விஜேபால நாடாளுமன்ற உறுப்பினராக அமரவும், நாடாளுமன்றத்தில் வாக்களிக்கவும் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply