
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிர்வரும் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது வேறொரு சின்னத்தில் போட்டியிடுவதா என்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், இது தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் இதுவரையில் கலந்துரையாடவில்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதே தற்போது கட்சியின் நிலைப்பாடாக காணப்படுவதாகவும், கட்சியில் பெரும்பான்மையானோர் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் நாட்களில் இதில் மாற்றங்கள் ஏதும் ஏற்பட்டால் அது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.