
கட்டுப்பாட்டு விலையை (கிலோ ஒன்று 230 ரூபா) மீறி அரிசியை அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக வணிக, உணவு பாதுகப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரிசியின் விலை சந்தையில் அதிகரித்துள்ளமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர நாடாளுன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிவப்பு அரிசி போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் ஒரு கிலோ அரிசியை 230 ரூபாவுக்கும் குறைவாக சதோசவில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் தம்புள்ளை, கொழும்பு கோட்டை, பதுளை, மாத்தறை, காலி மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் அதிக விலையில் அரிசி விற்பனை செய்தவர்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதுடன், அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அரிசி பற்றாக்குறையே விலை அதிகரிப்பிற்கான காரணம் என கூறியதோடு, விவசாயத்திற்குத் தேவையான உரங்களை வழங்கி அரசாங்கம் தொடர்ந்து விவசாயிகளுக்கு உதவியளிக்கும்” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.