நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள “ஒரு கைப்பிடிக்கு ஒரு விவசாய நிலம்” என்ற தேசிய திட்டம் இன்று முதல் ஆரம்பமாவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயிரிடப்படாமல் காணப்படுகின்ற அனைத்து விவசாய வயல் நிலங்களிலும் பயிரிடுவதை நோக்கமாகக் கொண்டு, விவசாயிகளுக்கு அறிவுறுத்துவதற்காக குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், உணவு கையிருப்புகளைப் பராமரித்தல், உள்நாட்டு உணவு நுகர்வு மற்றும் விவசாய பயிர் ஏற்றுமதியை அதிகரிப்பது ஆகியவை இந்தத் திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
அதன்படி இன்று (15) பொல்கஹவெல – ஹொதெல்லவில் அமைந்துள்ள ஜயசுந்தராராம விகாரைக்கு முன்பாக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆரம்ப நிகழ்வு, விவசாயம் மற்றும் கால்நடைத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தலைமையில் நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் உள்ள 566 கமநல சேவைப் பகுதிகளில் இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
