வாகனங்களின் விலை தற்போது உயர்ந்துள்ள நிலைமையில், வாகனங்களை இறக்குமதி செய்வது ஆபத்தானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று (18) நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“எனக்கு பெரிய ஜப்பானிய பைக் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்ப்பு இருந்தது.
1.4 மில்லியனுக்கு ஒரு விட்ஸை வாங்க முடியும் என்று யாரோ சொன்னார்கள்.
டொயோட்டா ரேய்ஸ் 122 லட்சமும், யாரிஸ் 185 லட்சமும், ப்ரியஸ் 289 லட்சம் என தற்போது விலை உயர்ந்துள்ளது. இங்கே தான் பாரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தனது வரவு-செலவுத் திட்ட உரையில் பெரும்பாலான வரி வருவாயை வாகன இறக்குமதியிலிருந்து எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
வாகனங்களின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. எனவே வாகனங்களை இறக்குமதி செய்வது மிகவும் ஆபத்தானது.
ஏனென்றால் இவ்வளவு விலைக்கு யார் வாகனங்களைக் கொண்டு வருவார்கள்? இலங்கையில் இதுபோன்ற வாகனங்களை வாங்கும் அளவுக்கு பணக்காரர்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
