சஞ்சீவவின் கொலை தொடர்பில் தொடரும் தீவிர விசாரணைகள்- வெளிப்படும் பரபரப்பு தகவல்கள்!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதிமன்றத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் தொடர்கின்றன.

அதன்படி கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் கூண்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவருக்கு எதிரான மூன்று வழக்குகளில் ஆஜராவதற்காக பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையிலிருந்து விசேட பாதுகாப்பின் கீழ் அவர் அழைத்து வரப்பட்ட நிலையில் இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டார்.

முன்னாள் ராணுவ வீரரும், உளவுத்துறை உறுப்பினருமான முகமது அஸ்மான் செரிஃப்தீன் என்ற 34 வயது நபர் கொலை செய்ததாக கூறப்பட்டது.

ஆனால், கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி, மஹரகம, தம்பஹேன வீதியில் வசிக்கும் 27 வயதுடைய சமிந்து தில்ஷான் பியுமங்க கந்தனாராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

துப்பாக்கிதாரி ஒரு ஐஸ் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், வாடகைக் கொலையாளியாக பல கொலைகளைச் செய்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரியின் வாக்குமூலம் இதோ!

புலனாய்வுப் பிரிவுகளுக்குக் கிடைத்த தகவல்களின்படி, சஞ்சீவவை கொல்லும் திட்டம் நாட்டிற்கு வெளியே இருந்து செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

துப்பாக்கிதாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாதாள உலக உறுப்பினர்களான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் அவிஷ்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் கணேமுல்ல சஞ்சீவவைக் கொன்றதாக அவர் தெரிவித்தார்.

பாதாள உலகக் கும்பல் தலைவர் சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவவை 15 மில்லியன் ரூபாய் ஒப்பந்தத்தில் சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

துப்பாக்கிதாரி, இந்தக் கொலை 15 மில்லியன் ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் 200,000 ரூபாய் ஊதியமாக தனக்கு வழங்கியதாகவும் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

கொலை செய்வதற்கு பல நாட்களுக்கு முன்பு துப்பாக்கிதாரி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தமை விசாரணைகளின் போது பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.

இந்த கொலைத் திட்டம் விரிவான ஒத்திகைகளின் பின்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பல சந்தர்ப்பங்களில் சட்டத்தரணி வேடமிட்டு நீதிமன்றத்துக்குள் சென்று நிலைமைகளை ஆய்வு செய்து ஒத்திகை பார்த்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சட்டத்தரணி வேடமணிந்த பெண் நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம வீதியைச் சேர்ந்த பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி (26) என்பவராவார்.

நீதிமன்ற வளாகத்திற்குள் முதலில் சட்டத்தரணி வேடமணிந்த பெண் உள்நுழைந்துள்ளார். பின்பு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்துள்ளார்.

அந்தப் பெண் தண்டனைச் சட்ட புத்தகத்திற்குள், குறிப்பாக புத்தகத்தின் பக்கங்கள் வெட்டப்பட்டு துப்பாக்கியை உள்ளே மறைத்து நீதிமன்ற வளாகத்திற்குள் எடுத்து வந்து, துப்பாக்கியை தன்னிடம் கொடுத்த பிறகு, அதை தனது இடுப்புப் பட்டையில் மறைத்து வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.

அந்தப் பெண்ணை சிறிது காலமாகத் தெரியும் என்றும், அதனால் அவருடன் நெருங்கிய உறவு வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறப்புப் பிரிவு குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் வழக்கு, புதுக்கடை, நீதிமன்றம் இலக்கம் 5 இல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​அங்கிருந்த மீதமுள்ளவர்கள் அகற்றப்பட்டு கதவுகள் மூடப்பட்டன.

இதற்கிடையில், சட்டத்தரணி போல் வேடமிட்டிருந்த துப்பாக்கிதாரி விசாரணைக் கூண்டில் இருந்த கணேமுல்ல சஞ்சீவவை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு, துப்பாக்கியை அவ்விடத்தில் விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, கணேமுல்ல சஞ்சீவவின் பாதுகாப்பிற்கு வந்த, குறித்த கதவுகளுக்கு அருகில் நின்றிருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகளிடம், “உள்ளே துப்பாக்கிச் சூடு நடக்கிறது” என்று கூறிவிட்டு துப்பாக்கிதாரி தப்பிச்சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, வாடகை வாகன செயலி மூலம் வாடகைக்கு வாகனம் ஒன்றை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்திற்கு அருகில் இருந்து நீர்கொழும்புக்கு அருகிலுள்ள ஒரு பகுதிக்குச் சென்றதாக சந்தேக நபர் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

தன்னை அழைத்துச் செல்ல கார் ஒன்று அவ்விடத்திற்கு வருவதாக கூறிய போதும், அவ்வாறு வாகனங்கள் எதுவும் வராததால் இவ்வாறு செய்ததாகக் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கூறியுள்ளார்.

பின்னர் துப்பாக்கியைக் கொண்டு வந்த பெண்ணுடன் கடை ஒன்றுக்குச் சென்று ஆடைகளை வாங்கியதாக அவர் கூறினார்.

பின்னர் நீர்கொழும்புக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் இருந்து வாடகைக்கு எடுத்த வேனில் கல்பிட்டிக்கு பயணம் செய்து, இந்தியாவுக்கு தப்பிச் செல்லத் தயாரானதாக அவர் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர், தன்னிடம் இருந்த போலி அடையாள அட்டைகள் அனைத்தும் அவிஷ்க என்ற குற்றவாளியால் தயாரிக்கப்பட்டவை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

அதேபோல், கல்கிஸ்ஸை, வட்டரப்பல பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலையை தானே செய்ததாக அவர் வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புத்தளம் மற்றும் கோனஹேன முகாம்களின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​புத்தளம் நோக்கி வேனில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

வெள்ளை வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, ​​சிசிடிவி காட்சிகளில் இருந்த தோற்றமுடைய ஒருவரை புலனாய்வாளர்கள் விசாரித்த நிலையில், அவர்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்பது தெரியவந்தது.

அவரது பயணப் பொதியில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்போது, கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை அழைத்துச் சென்ற வேன் சாரதியும் கைது செய்யப்பட்டார்.

பின்னர், துப்பாக்கிதாரி அணிந்திருந்த சட்டத்தரணி ஆடை குறித்து விசாரித்தபோது, ​​குறித்த ஆடைகள் அடங்கிய பையை கொச்சிக்கடை-ரிதீவெல்ல வீதியில் விட்டுச் சென்றதாகக் தெரிவித்துள்ளார்.

கொழும்பு குற்றப்பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக லொக்குஹெட்டியின் வழிகாட்டுதலின் கீழ் பிரதான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தக் கொலைகள் குறித்து விசாரிக்க ஐந்து குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.

பெண் சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதைத் தடுக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் துப்பாக்கிதாரியும், சந்தேகநபரான பெண்ணும் கடுவெல பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் இருந்து இந்தக் கொலையைச் செய்ய வந்திருப்பது தெரியவந்துள்ளது.

குறித்த ஹோட்டலில் இருந்து புதுக்கடை நீதவான் நீதிமன்றிற்கு வருவதற்காக பயன்படுத்தப்பட்ட கம்பஹா, மல்வத்து, ஹிரிபிட்டிய பகுதியில் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனத்தையும் கொழும்பு குற்றப்பிரிவு பறிமுதல் செய்துள்ளது.

அத்துடன் சஞ்சீவ கொலை தொடர்பில், நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள குற்றவியல் பிரிவில் நீதிமன்றப் பணிகள் பிரிவில் கடமையாற்றிவந்த 26 வயதுடைய பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி வீரசிங்கவுடன் அவர் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்ததன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதற்கட்ட வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், கைது செய்யப்பட்ட அதிகாரி மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் உடல் நேற்று (20) பிற்பகல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலைக்கு கொண்டு வரப்பட்டது.

கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் நேற்று பிற்பகல் சடலத்தின் பிரேத பரிசோதனை இடம்பெற்ற நிலையில், அவரது மூத்த சகோதரி உடலைப் பெற வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply