யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் நிலவிவரும் மருத்துசேவை ஊழியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு சுகாதார அமைச்சால் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்
யாழ். மாவட்டத்தில் உள்ள அரச மருத்துவமனைகளில் காணப்படும் மனிதவள தேவைகளை இனங்கண்டு அவற்றிற்கு உரிய தீர்வுகளை பெற்று தரும் நோக்குடன் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் விசேட கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது ஊர்காவற்றுறை பொது மருத்துவமனை, வேலணை மாவட்ட மருத்துவமனை, வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், யாழ்.போதனா வைத்தியசாலை, சாவகச்சேரி பொது வைத்திய சாலை மற்றும் மாங்குளம் பொது வைத்தியசாலை ஆகியவற்றில் மனித மற்றும் பௌதீக வளங்களில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வைத்தியசாலையில் உள்ள மனித மற்றும் பௌதீக வளங்களில் உள்ள குறைபாடுகள் தொடர்பிலான பிரச்சனைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படும் என பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
