தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, காங்கேசன்துறைக்கு முன்னெடுக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை 3 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் 83 பயணிகளுடன் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து யாழ். காங்கேசன்துறைக்கு புறப்பட்டுள்ளது.
மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – இலங்கை உறவை மேம்படுத்தும் வகையில் 2003 ஆண்டு அக்டோபர் மாதம் நாகையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் கப்பல் சேவையானது நவம்பர் மாதம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சிவகங்கை கப்பல் போக்குவரத்துக்கு தயாரான நிலையில், இந்தியா- இலங்கை இடையிலான கப்பல் சேவை மீண்டும் இன்று ஆரம்பிக்கப்படும் என கப்பலை இயக்கும் நிறுவனம் அறிவித்தது. அதன்படி இன்று கப்பல் சேவை தொடங்கியுள்ளது.
இந்த கப்பல் சேவையானது செவ்வாய் கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் ஈடுபடும் எனவும், www.sailsubham.com என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசித்து பயணச்சீட்டுகளை பதிவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
