மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும். காரிய வெற்றியும் ஏற்படும். ‘சிவாய நம’ என்று சிந்தித்திருந்தால் ‘அபாயம்’ நமக்கு ஏற்படாது,’உபாயம்’ நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
இந்தப் பிரபஞ்சம் மீண்டும் தோன்ற இறைவன் அருள் செய்த காலம் மகாசிவராத்திரி என்பதால் மிகுந்த சிறப்பினை உடையது என்கின்றன ஞான நூல்கள். அப்படிப்பட்ட மகா சிவராத்திரி நாளில் இரவு விழித்திருந்து சிவ வழிபாடு செய்தால் சகல நன்மைகளும் உண்டாகும் என்கிறார்கள் பெரியோர்கள்.
பொதுவாகச் சிவராத்திரி அன்று இரவு முழுவதும் நான்கு யாமம் பூஜை நடைபெறும், அன்று விரதம் கடைப்பிடிப்பவர்கள் சிவராத்திரி முந்தைய நாளில் ஒரு பொழுது மட்டும் உணவு உண்ண வேண்டும், சாயங்காலம் குளித்து விட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும்.
இரவு முழுவதும் நான்கு யாமம் பூஜையில் கலந்து கொண்டு மறுநாள் காலையில் சிவனை தரிசனம் செய்து விட்டு, தீர்த்தம் பருகி விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். மேலும் சிவராத்திரி இரவு வழிபாடு செய்பவர்கள் மறுநாள் முழுவதும் பகலில் உறங்காமல் இருக்க வேண்டும்.
மஹா சிவராத்திரி அன்று நான்கு ஜாமமும் சிவலிங்க பூஜையும், வழிபாடும் நடைபெற வேண்டும். சிவபூஜை வழிபாடு செய்வோர் முதற் ஜாமத்தின் போது மூலமூர்த்திக்கு பஞ்ச கவ்வியத்தினால் அபிஷேகம் செய்து சந்தனக்குழம்பு சாத்தி வில்வம், தாமரை, துளசி ஆகியவற்றால் அர்ச்சித்து பாசிப் பருப்பு நைவேத்தியமாக படைத்து பூஜை செய்ய வேண்டும்.
இரண்டாவது ஜாமப் பூஜையின்போது பஞ்சாமிர்தத்தினால் அபிஷேகம் செய்து அகில் குழம்பு சாத்தி, வில்வம், தாமரை துளசி ஆகியவற்றால் அர்ச்சித்து பாயாச நிவேத்தியம் வைத்து பூஜை செய்து வழிபட வேண்டும்.
மூன்றாம் ஜாமத்தின் போது தேன், அபிஷேகம், பச்சைக் கற்பூரம், சுண்ணம் சாத்தி, எள் அன்னம் நிவேதித்து பூஜை செய்ய வேண்டும்.
நான்காம் ஜாமம் பூஜையின் போது கரும்புச் சாற்றினால் அபிஷேகம் செய்து, குங்குமம் சாத்தி வில்வம் நந்தியாவந்தனம் கொண்டு அர்ச்சித்து சுத்த அன்னம் படைத்து பூஜை செய்யவேண்டும். அணுசக்தியை விட மந்திரசக்தி, யந்திர சக்தி பலம் வாய்ந்தவை. அதனால் மகா சிவராத்தியின் நான்கு காலங்களிலும் சிவ மந்திரங்களை உச்சரிப்பது மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும்.
மஹாசிவராத்திரி இரவு நாம் கண்விழித்து, தூங்காமல் நான்கு ஜாமப் பூஜையும் கண்டால் இறையருள் பெற்று நாம் விரும்புவதை நிச்சயம் பெற முடியும்.
ஆணவம் அகந்தையை அகற்றி சாந்தி, சமாதானத்துக்கு வழிகாட்டும் காலம் மஹா சிவராத்திரிக் காலமாகும்.
அடிமுடி தேடிச் சென்ற திருமாலுக்கும் பிரமனுக்கும் திருவண்ணாமலையில் அருள் கிடைத்ததும் இதே சிவராத்திரி நாளில் தான்.
பிரம்மா, விஷ்ணுவின் அகந்தை அடங்கி சிவன் தாழ் சரணடைந்து மனச்சாந்தி பெற்றதும் மஹாசிவராத்திரி நாள் தான்.
பிரமனும், விஷ்ணுவும் தங்களின் அறியாமையை நினைத்து சிவபெருமானின் ஜோதி வடிவைத்தை தரிசித்து சிவபெருமானே முழு முதற்கடவுளென ஏற்றுக் கொண்ட நன்நாளே மஹாசிவராத்திரி நாளாகும்.
