
2025 வரவு செலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (27) போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் இன்று (27) நண்பகல் 12 மணி முதல் 1.00 மணி வரை, ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் நாலக ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
அடிப்படை சம்பளத்தில் 1/160 வீதம் வழங்கப்பட்டு வந்த கூடுதல் நேர கொடுப்பனவை 1/200 ஆகக் குறைத்தல், இரண்டாம் தரம் மற்றும் அதற்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்படும் அரசு விடுமுறை கொடுப்பனவு மற்றும் வாராந்திர ஓய்வு கொடுப்பனவை 1/30 ஆகக் குறைத்தல் மற்றும் பதவி உயர்வு முறையைக் குறைத்தல் ஆகிய பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மேலதிக நேரம் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினையை முன்னிறுத்தி கிழக்கு மாகாணத்தில் மட்டும் இன்று சுகயீன விடுமுறையை பதிவு செய்து அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹண தெரிவித்தார்.
மேலும் இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அதிபர்களுக்கு எதிர்பார்க்கப்பட்ட கொடுப்பனவுகள் வழங்கப்படாதது குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக அதிபர் தர அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்காலத்தில் அனைத்து தர அதிபர்களையும் கொழும்புக்கு வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் நிமல் முதுங்கொடுவ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.