
எல்லை தாண்டும் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ் மாவட்ட தீவக கடற்றொழிலாளர் சங்கங்கள் இணைந்து இன்று (27) போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டமானது யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் ஆரம்பமாகி அருகாமையில் அமைந்துள்ள யாழ். மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தின் உதவி ஆணையாளரிடம் மகஜர் ஒன்றினை கையளித்து விட்டு தொடர்ந்து யாழ் வைத்தியசாலை வீதியூடாக யாழ். இந்திய துணை தூதரகத்தினை அடைந்தது.
இந்த போராட்டத்தின் போது,
தாண்டாதே தாண்டாதே எல்லை தாண்டாதே!
வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்!
அள்ளாதே அள்ளாதே எமது வளத்தை அள்ளாதே!
வாழ விடு வாழ விடு எங்களை வாழ விடு!
ஆகிய கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டகாரர்கள் இந்தியத் துணைத் தூதரத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், பொலிஸார் இந்திய தூதரகத்திற்கு கடுமையான பாதுகாப்பினை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.