பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம் இயற்றப்படும்- ஹர்ஷன நாணயக்கார!

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் கோட்பாடுகளுக்கு அமைவாக புதிய சட்டம் இயற்றப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (27) உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வரவு – செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் விடயதானத்துக்குப் பொறுப்பற்ற வகையில் பேசுவதுடன் விமர்சனங்களை மாத்திரம் முன் வைக்கிறார்கள். இருப்பினும் ஒரு சிலர் பொறுப்புடன் செயல்படுவது வரவேற்கத்தக்கது.

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாங்கள் மறக்கவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று அன்றும் குறிப்பிட்டோம்.

அதேபோல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக கொண்டு வந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கும் நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தோம்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் ஆகியவற்றை மீளாய்வு செய்வதற்காக நீதியரசர் ஹர்ஷ குலரத்ன (ஓய்வு) தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த நடவடிக்கைகள் அடுத்த தேர்தல் வரை இழுத்துச் செல்ல படமாட்டாது.

பூகோள பயங்கரவாதம் மற்றும் பூகோள நவீன சவால்கள் ஆகியவற்றை எதிர்க் கொள்ளும் வகையில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சட்டம் விரைவில் இயற்றப்படும். உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் கோட்பாடுகளுக்கு அமைவாகவே புதிய சட்டம் இயற்றப்படும்.

ஆகவே இந்தச் சட்டம் இயற்றப்பட்டவுடன் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும். இந்த விடயத்தில் எவரும் அச்சம் கொள்ள வேண்டாம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply