தமிழரசு கட்சியை உடைக்க முயற்சித்தாலும் அதை தாண்டி நாம் முன்னேறுவோம்- சி.வி.கே. சிவஞானம்!

‘தமிழரசு கட்சியை இலக்கு வைத்து உடைக்க முயற்சிகள் எடுத்தாலும் அதையெல்லாம் தாண்டி நாம் முன்னேறுவோம்’ என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது புதிய தமிழரசுக் கட்சி உருவாக்கம் குறித்து பேசப்படுகின்றது. உண்மையில் அப்படியாக கட்சிக்குள் இருப்பவர்கள் யாரும் கருதவில்லை.

அப்படியான எண்ணங்கள் கூட அவர்களிடத்தில் இல்லை. ஏனெனில் கட்சியில் பலருடனும் இது தெடர்பில் பேசியிருந்தபோது அவர்கள் அனைவரும் இதனை மறுதலித்துள்ளனர்.

குறிப்பாக தமிழ் மக்களின் நீண்டகால பாரம்பரியக் கட்சியாக இருக்கின்ற இந்த தமிழரசுக் கட்சியை எப்படியாவது உடைத்துவிட வேண்டும் என்று விசமத்தனமான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரையில் கடந்த 75 வருட கால வரலாற்றில் சோரம் போகாத – ஊழலில் ஈடுபடாத – தமிழ் மக்களின் பாரம்பரியக் கட்சியாக இந்தக் கட்சியே திகழ்ந்து வருகின்றது.

இத்தகைய கட்சியை உடைக்கப் பலரும் பல சந்தர்ப்பங்களில் முயற்சி செய்திருந்தாலும் இது பலனளிக்காத நிலைமையே ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையில் ஜனநாயகத் தமிழரசு என்றும், புதிய தமிழரசு என்றும் புதிய புதிய பெயர்களைச் சொல்லிக்கொள்கின்றனர். அவ்வாறாகத் தமிழரசை உடைப்பவர்களுக்கு தமிழரசு என்ற சொல்லும் தேவைப்படுவது ஆச்சரியமானது.

ஆக மொத்தத்தில் தமிழரசை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது. ஆனாலும், தெற்கத்தேயே சிங்கள நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் உடைக்கும் முயற்சியை தொடர்ந்தும் செய்தாலும் இது பலனளிக்காது என்பதையும் சொல்லி வைக்க விரும்புகின்றோம்.

மேலும் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவராக நானும் பதில் பொதுச்செயலாளராக சுமந்திரனும் பதவிக்கு வருவதற்குப் புதிதாக ஒன்றும் செய்யவில்லலை. யாப்பில் குளறுபடி செய்து இந்தப் பதவிகளுக்கு நாம் வரவில்லை.

எமது கட்சியின் யாப்புக்கமையத்தான் இப்போது அந்தப் பதவிகளை எடுத்திருக்கின்றோம்.

இவ்வாறான நிலைமைகள் இருக்கத்தக்கதாக மக்கள் மத்தியில் பிழையான தகவல்களைப் பரப்பி விசமத்தனமான பிரச்சாரங்களை சிலர் மேற்கொள்கின்றனர். அதுவும் இப்போது தேர்தல் காலம் என்பதால் இன்னும் இன்னும் அதிகளவில் போலிப் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர்.

எனவே, தமிழரசைப் பிளவுபடுத்தும் நோக்கில் முன்வைக்கப்படும் பொய்ப் பிரச்சாரங்களை சரியான முறையில் எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறாக தமிழரசை இலக்கு வைத்து அதை உடைக்க முயற்சிகள் எடுத்தாலும் அதையெல்லாம் தாண்டி நாம் முன்னேறுவோம்.

மாற்றான சிந்தனையில் பொறுப்பான அணுகுமுறையைப் பின்பற்றி அநேகமாக எல்லா இடங்களிலும் சபைகளைக் கைப்பற்றுவோம். ஆனாலும், ஆட்சியமைக்க தேவைப்படும் இடங்களில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடனும் பேசுவோம் என்று தெரிவித்திருந்தார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply