தேசிய விலங்கு கணக்கெடுப்பு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்து 5 நிமிடம் வரையில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என விவசாய, கால்நடை வளர்ப்பு, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிவித்திருந்தது.
அதன்படி தேசிய விலங்கு கணக்கெடுப்பு இன்று (15) காலை 8 மணிக்கும் ஆரம்பித்து 8.05க்கு நிறைவடைந்தது.
ஒருவர் தனது தோட்டம், சாகுபடி நிலம், புனித இடங்கள் மற்றும் பிற பொது இடங்களை 5 நிமிடங்கள் கண்காணித்து, அந்த நேரத்தில் வளாகத்தில் இருக்கும் குரங்குகள், அணில்கள், மர அணில்கள் மற்றும் மயில்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து , கணக்கெடுப்பு தாளில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
பதிவு செய்த விபரத்தை ஒவ்வருத்தரும் தத்தமது பிரதேச கிராம அலுவலர் அல்லது பொருளாதார மேம்பாட்டு அலுவலர் அல்லது சமுர்த்தி மேம்பாட்டு அலுவலர் அல்லது விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளரிடம் கையளிக்குமாறு விவசாய, கால்நடை வளர்ப்பு, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிவித்திருந்தது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் பயிர் இழப்புகளைக் குறைத்தல் மற்றும் பயிர்களை சேதப்படுத்தும் வன உயிரினங்களின் எண்ணிக்கையை மதிப்பிடுதல் ஆகிய முதன்மை நோக்கங்களுக்காக இந்த கணக்கெடுப்பு நடாத்த திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் வளமான பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் ஆதார அடிப்படையிலான கொள்கை முடிவுகள் மற்றும் இலக்கு தலையீடுகளுக்காக சேகரிக்கப்படும் தரவுகள் அடிப்படையாகும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
