மாத்தறை நீதவான் நீதிமன்றம் தன்னை கைது செய்ய பிறப்பித்த உத்தரவை இரத்து செய்யக் கோரி முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு இன்று (17) அறிவிக்கப்படவுள்ளது.
இந்த மனு மீதான தீர்மானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.
மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 பேரைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் (28) உத்தரவிட்டது.
எனினும் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 17 நாட்கள் கடந்துவிட்ட போதிலும் இன்றுவரை அவர் தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை.
மாத்தறை நீதவான் நீதிமன்றம் முன்னாள் பொலிஸ்மா அதிபரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்த போதிலும், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இதுவரையில் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கண்டவுடன் கைது செய்ய உத்தரவிட்டு, மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த 11 ஆம் திகதி திறந்த பிடியாணையை பிறப்பித்தது.
மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மார்ச் 10ஆம் திகதி ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணையை மார்ச் 12ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதும், ரிட் மனு மீதான விசாரணையை 17ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அதன்படி முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
